ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் விரைவில் கட்டணம் வசூல்?- ரிசர்வ் வங்கி முன்மொழிவால் பயனர்கள் அதிர்ச்சி
கட்டணம் இல்லாத யுபிஐ சேவை என்ற விதியில் விரைவில் மாற்றம் ஏற்படவிருக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை , இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது. இதைப் பயன்படுத்த பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் யுபிஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கட்டணம் இல்லாத யுபிஐ சேவை என்ற விதியில் விரைவில் மாற்றம் ஏற்படவிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ பரிவர்தனைகளுக்கு கட்டணங்கள் வசூலிப்பது குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைக் கோரியுள்ளது
பயனர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக பயனர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு யுபிஐ நிதிப் பரிவர்த்தனைக்கும் கட்டணத்தைச் வசூலிப்பது குறித்து வங்கி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்மொழிவில், "யுபிஐ என்பது ஐஎம்பிஎஸ் போன்றது. எனவே, ஐஎம்பிஎஸ் இல் உள்ள கட்டணங்களைப் போலவே யுபிஐ பணப்பரிவர்தனைகளுக்கு கட்டணங்கள் இருக்க வேண்டும். வெவ்வேறு தொகை வரம்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட கட்டணம் விதிக்கப்படலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.