'காங்கிரசில் சேர அழைப்பு வந்தது உண்மை'; ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ. சம்ரிதி மஞ்சுநாத் பகீர் தகவல்
காங்கிரசில் சேர தனக்கு அழைப்பு வந்தது உண்மை தான் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ. சம்ரிதி மஞ்சுநாத் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
முல்பாகல்:
காங்கிரசில் சேர தனக்கு அழைப்பு வந்தது உண்மை தான் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ. சம்ரிதி மஞ்சுநாத் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.
கோலார் மாவட்டம் முல்பாகல் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சம்ரிதி மஞ்சுநாத். இவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் தங்கள் கட்சியில் சேரக்கூறி அணுகியது உண்மை தான். ஆனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை விட்டு விலகும் எண்ணம் எனக்கு இல்லை. காங்கிரசில் சேர வந்த அழைப்பு பற்றியும் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவேளை நான் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர நினைத்தால் அதுபற்றி வெளிப்படையாக எனது ஆதரவாளர்கள், தலைவர்கள், தொகுதி மக்களிடம் பேசி கருத்து கேட்டு முடிவு எடுப்பேன். நான் யாருடைய கைப்பாவையும் இல்லை. நான் யாருக்கும் அடிமையாகவும், பொம்மையாகவும் வாழவில்லை.
அழைப்பு
நான் முதல்-மந்திரி சித்தராமையாவையும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரையும் சந்திப்பதற்காக பெங்களூருவுக்கு சென்றேன். தொகுதி வளர்ச்சி குறித்து அவர்களிடம் பேசி நிதி பெறுவதற்காக சென்றிருந்தேன். ஆனால் அவர்களை என்னால் சந்திக்க முடியவில்லை. நானும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணசாமியும் சகோதரரை போன்றவர்கள். காங்கிரசில் சேருமாறு நாராயணசாமி எம்.எல்.ஏ. என்னை நேரடியாகவே அழைத்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போனில் தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுத்தார்.
இதுபோல் பா.ஜனதாவில் இருந்தும் எனக்கு அழைப்பு வந்தது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் என்னை எம்.பி. ஆக்குவதாக அவர்கள் கூறினர். ஆனால் எனக்கு எம்.எல்.ஏ. பதவியே போதும். இதுவே எனக்கு திருப்தி அளிக்கிறது.
தேவேகவுடா குடும்பத்துடன் நெருக்கம்
நான் காங்கிரசில் சேர இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஒருவேளை நான் எம்.பி. ஆக வேண்டும் என்று கடவுள் எழுதி இருந்தால் அது நடந்தே தீரும். அதை யாராலும் தடுக்க முடியாது. அரசு என்பது ஒரே இடத்தில் நிற்கும் நீர் அல்ல. அது ஆறுபோல ஓடிக்கொண்டே இருக்கும் நீர். நான் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு கடமைப்பட்டுள்ளேன். தேவேகவுடா குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.