அக்னிவீரர் திட்டம் குறித்து தவறான தகவல் - ராகுல்காந்தி பேச்சுக்கு மத்திய மந்திரி விளக்கம்


அக்னிவீரர் திட்டம் குறித்து தவறான தகவல் - ராகுல்காந்தி பேச்சுக்கு மத்திய மந்திரி விளக்கம்
x

எப்போது கேட்டாலும் அக்னிவீரர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் அறிக்கை அளிக்க தயாராக இருக்கிறேன் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கிய நிலையில், 23-ம் தேதி 2024-2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. பட்ஜெட் குறித்து காரசார விவாதம், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல், அமளி என அவை நடவடிக்கைகளில் அனல் பறந்து வருகிறது.

இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, "மகாபாரதத்தில் சக்கர வியூகம் நடந்ததுபோல் தற்போது தாமரை வியூகம் நடக்கிறது. மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கியதுபோல நாடும் தாமரை வியூகத்தில் சிக்கியுள்ளது. சக்கர வியூகத்தை துரோணர், அஸ்வத்தாமன் கட்டுப்படுத்தியதுபோல் மோடி, அமித்ஷா கட்டுப்படுத்துகின்றனர்.

பா.ஜ.க. ஒருவரை மட்டுமே பிரதமராக அனுமதிக்கிறது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பா.ஜ.க. ஆட்சியில் மத்திய மந்திரிகளே ஒருவித அச்சத்தில் உள்ளனர். அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்க்கப்படுபவர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஓய்வூதியமாக வழங்கப்படுவது இல்லை. அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்ஜெட்டில் எந்த ஏற்பாடுகளும் இல்லை" என்று கூறினார்.

இந்த நிலையில் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளித்தார். அவர் கூறும்போது, "அக்னிவீரர் திட்டம் குறித்து ராகுல் காந்தி தவறான தகவல்களை அளித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினை உணர்வுபூர்வமானது. அக்னிபாத் திட்டம் தொடர்பாக நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சி நடக்கிறது. எப்போது கேட்டாலும் அக்னிவீரர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் அறிக்கை அளிக்க தயாராக இருக்கிறேன் என்று கூற விரும்புகிறேன்" என்று கூறினார்.


Next Story