2 ஏக்கரில் தக்காளி செடிகளை நாசப்படுத்திய மர்மநபர்கள்
சாம்ராஜ்நகாில் 2 ஏக்கரில் பயிரிட்டிருந்த தக்காளி செடிகளை மர்மநபர்கள் நாசப்படுத்தினர். இதனால் விவசாயி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
கொள்ளேகால்:-
தக்காளி
நாட்டில் தக்காளி விலை விண்ணை தொடும் அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனையாகிறது. தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக மார்க்கெட்டில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி பேசும்பொருளாக மாறி உள்ளது.
மேலும் தக்காளி திருட்டும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் வியாபாரம் செய்து வருகிறார்கள். தக்காளி பயிரிட்டு விற்பனை செய்யும் விவசாயிகள் நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சாம்ராஜ்நகரில் 2 ஏக்கரில் பயிரிட்டிருந்த தக்காளியை மர்மநபர்கள் அழித்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
செடிகள் நாசம்
சாம்ராஜ்நகர் தாலுகா கெப்பேபூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு. விவசாயி. அவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். தக்காளிகள் நன்கு விளைந்து இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்ய தயாராக இருந்தது. தற்போது தக்காளி விலை உச்சத்தில் உள்ளதால், அதனை அறுவடை செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று மஞ்சு மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வந்தார். தற்போதைய விலைக்கு தக்காளியை விற்பனை செய்தால் அவருக்கு ரூ.20 லட்சம் வரை கிடைத்திருக்கும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்மநபர்கள், மஞ்சுவின் விளைநிலத்துக்குள் புகுந்து தக்காளி செடிகளை நாசப்படுத்திவிட்டு சென்றனர்.
ரூ.20 லட்சம் நஷ்டம்
நேற்று காலை மஞ்சு வழக்கம் போல தனது விளைநிலத்துக்கு சென்றார். அப்போது தக்காளி செடிகள் நாசமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் யாரோ மர்மநபர்கள், இரவில் தக்காளி தோட்டத்துக்குள் புகுந்து செடிகளை நாசப்படுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. தக்காளி விலை உயர்வால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்டி வரும் நிலையில், தான் சாகுபடி செய்த தக்காளி ெசடிகளை மர்மநபர்கள் அழித்து நாசப்படுத்தியதால் மஞ்சு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாம்ராஜ்நகர் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதனால் மஞ்சுவுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.