'பாரத் மாதா கி ஜே' என முழக்கமிடாமல் இருந்தவர்களை மேடையிலேயே சாடிய மத்திய மந்திரி
‘பாரத் மாதா கீ ஜே’ என்று கூறாதவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று கோழிக்கோட்டில் நடந்த மாநாட்டில் மத்திய பெண் மந்திரி கூறியததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேரு யுவகேந்திரா மற்றும் கேலோ பாரத் சார்பில், விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி இளைஞர்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி, "கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் எனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவர். இதற்கு காரணம் ராஜீவ்காந்தி மந்திரி சபையில் அவர் ராஜினாமா செய்தது, ஷாபானு வழக்கில் முத்தலாக்கை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதே ஆகும். அப்போது நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். தற்போது முத்தலாக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.
நாட்டின் மக்கள் தொகையில் 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். மோடியின் வாக்குறுதி மக்களுக்கான வாக்குறுதியாகும். அதனால் தான் பல்வேறு நலத்திட்டங்களை விரைவாக ஊழல் இன்றி செயல்படுத்த முடிந்தது என்று அவர் பேசினார்.
முடிவில் அவர் 'பாரத் மாதா கீ ஜே' என்று முழக்கமிட்டார். அதற்கு பார்வையாளர்களிடம் இருந்து எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால், இந்தியா உங்கள் தாய் அல்லவா? என்று கேட்டார். சொல்லுங்கள். சந்தேகம் உள்ளதா? என்று மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறினார்.
பின்னர் அவர் திரும்ப திரும்ப முழக்கத்தை சொன்னார். அப்போது முழக்கமிடாமல் இருந்த பெண்ணை சுட்டிக்காட்டினார். அந்த பெண் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த மத்திய மந்திரி, கோஷம் எழுப்ப தயங்குபவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என்றார்.
இதையடுத்து அவர், பாரத் மாதா கீ ஜே' என அழைத்த பின்னர், அங்கிருந்த அனைவரும் 'பாரத் மாதா கீ ஜே' என்று முழக்கமிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.