நாடு ழுழுவதும் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் மாபெரும் ரெய்டு..! 'ஆபரேஷன் மிட்நைட்' எவ்வாறு திட்டமிடப்பட்டது?


நாடு ழுழுவதும் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் மாபெரும் ரெய்டு..! ஆபரேஷன் மிட்நைட் எவ்வாறு திட்டமிடப்பட்டது?
x
தினத்தந்தி 22 Sept 2022 1:53 PM IST (Updated: 22 Sept 2022 1:56 PM IST)
t-max-icont-min-icon

பிஎப்ஐ அமைப்பின் இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பி.எப்.ஐ அமைப்பின் கட்சி அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ நடத்திய மாபெரும் ரெய்டு எவ்வாறு திட்டமிடப்பட்டது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெறாத மிகப்பெரிய அளவிலான சோதனையாக இன்றைய ரெய்டு அமைந்தது.

முன்னதாக, அமலாக்கத்துறை, உளவுத்துறை(ஐ.பி) மற்றும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) ஆகிய துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் செப்டம்பர் 19 அன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

அதில் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் மாபெரும் ரெய்டு நடத்த ரகசிய திட்டம் தீட்டப்பட்டது. இத்திட்டத்திற்கு 'ஆபரேஷன் மிட்நைட்' எனப் பெயரிடப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் 11 மாநிலங்களில் உள்ள பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

பெரும்பாலான இடங்களில் நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி வியாழன் காலை 5 மணிக்கு ரெய்டு முடிந்தது.இதனால் பிஎப்ஐ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களால் பாதிப்பு இல்லை. மேலும், உள்துறை அமைச்சகம் முழு சோதனையையும் கண்காணித்து வந்தது.

நான்கு ஐ.ஜிக்கள், ஏடிஜி, 16 எஸ்.பிக்கள் உட்பட 200 என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 150-க்கும் மேற்பட்ட செல்போன்கள், 50-க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள், ஆவணங்கள், பார்வை ஆவணங்கள், பதிவு படிவங்கள் உள்ளிட்ட குற்றச் சாட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மாபெரும் ரெய்டு நடத்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விவரம் ஆகியன கடந்த ஒரு வார காலமாக ரகசியமாக சேகரிக்கப்பட்டு வந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்தது தொடர்பாக செப்டம்பர் 19 ஆம் தேதி என்ஐஏ ரிமாண்ட் அறிக்கையை தாக்கல் செய்தது.

என்ஐஏ அறிக்கையின் படி, பயங்கரவாத நடவடிக்கைக்கு சதி செய்ய பிஎப்ஐ அமைப்பு முயற்சிப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு கொல்வதற்கான பயிற்சியை பிஎப்ஐ அமைப்பு ஆர்வலர்களுக்கு அளித்து வருவதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, புலனாய்வு பிரிவுகள் சேகரித்த தகவலின்படி, வளைகுடா நாடுகளில் உள்ள நெட்வொர்க் மூலம் பிஎப்ஐ அமைப்பு குற்றச்செயல்களுக்காக ரகசியமாக நிதி திரட்டிய விஷயம் உள்துறை அமைச்சகத்துக்கு தெரியவந்தது. திரட்டிய நிதி, அதன்பின்னர் பல்வேறு ரகசிய வழிகளில் பிஎப்ஐ வங்கிக் கணக்குகள் உட்பட பலருக்கு மாற்றப்பட்டது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, என்ஐஏ பொது இயக்குநர் தின்கர் குப்தா ஆகியோருடன் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டார். நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பிற்குச் சொந்தமான இடங்கள், வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்ற நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் நாடுழுழுவதும் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 10, புதுச்சேரியில் 3, கேரளாவில் 22 , கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் 20, அசாமில் 9 பேர் என 11 மாநிலங்களில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story