பெண்ணை கேலி செய்வது சித்ரவதை ஆகாது- தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 3 பேரை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு


பெண்ணை கேலி செய்வது சித்ரவதை ஆகாது- தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 3 பேரை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு
x

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் எதுவும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார்.

மும்பை:

மராட்டிய மாநிலம் நந்துர்பூரை சேர்ந்த பெண் கடந்த 1994-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடலில் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக பெண்ணின் கணவர், மைத்துனர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நந்துர்பூர் செசன்ஸ் கோர்ட்டு, பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேருக்கும் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து அவர்கள் மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளையில் மேல் முறையீடு செய்தனர்.

மனுவை நீதிபதி அபய் வாக்வாசே தலைமையிலான ஒரு நபர் அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

"கணவர் உள்பட 3 பேரும் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் எதுவும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெண்ணை சமைக்க தெரியவில்லை என கேலி செய்ததாகவும், பணம் கேட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வெறுமனே கேலி செய்வது, இகழ்வாக பேசுவது என்பது சித்ரவதை செய்வது அல்லது மனரீதியாக துன்புறுத்துவது ஆகாது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை சரியாக சமைக்கவில்லை, துணி துவைப்பதில்லை, அதிகமாக சாப்பிடுவதாக கேலி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் வரதட்சணை கொடுக்கவில்லை என அவர்கள் பெண்ணை கொடுமைப்படுத்தினார்கள் என்பதற்கு ஆதாரமில்லை " என கூறிய நீதிபதி, தற்கொலை செய்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர், மாமியாருக்கு எதிராக செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய உத்தரவை ரத்து செய்தார்.


Next Story