மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்க சட்ட நடவடிக்கை-பசவராஜ் பொம்மை
மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார்.
பெங்களூரு
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:- மகதாயி நதி நீரில் கர்நாடகம் 3.90 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை கலசா-பண்டூரி நல திருவு யோஜனா திட்டத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மகதாயி தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளிக்க இருக்கிறது. விரைவில் ஒப்புதல் கிடைத்தால் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. நாமும்(கர்நாடக அரசு) நம் தரப்பு வாதங்களை எடுத்துவைத்து வருகிறோம். இந்த வழக்கை விரைந்து முடிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதி கிடைக்கும்
கூடிய விரைவில் இந்த வழக்கு தள்ளுபடியானால், மேகதாது திட்டத்தை அமல்படுத்த அனுமதி கிடைக்கும். அப்படி அனுமதி கிடைத்தவுடன் அந்த திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டில் நீர்ப்பாசன திட்டங்களுக்காக ரூ.25 ஆயிரம் கோடியை கர்நாடக அரசு ஒதுக்கி உள்ளது.
மேலும் விவசாயம் மற்றும் அதை சார்ந்த பணிகளுக்காக ரூ.39 ஆயிரத்து 31 கோடியை அரசு ஒதுக்கி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.