ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. உத்தரவின்பேரில் வாக்கு எண்ணும் தேதி மாற்றப்பட்டுள்ளது- மெகபூபா முப்தி


ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. உத்தரவின்பேரில் வாக்கு எண்ணும் தேதி மாற்றப்பட்டுள்ளது- மெகபூபா முப்தி
x

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

இந்நிலையில், பா.ஜ.க. உத்தரவின்பேரில் வாக்கு எண்ணும் தேதி மாற்றப்பட்டுள்ளது என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பா.ஜ.க.வுக்கு எது வசதியானதோ அதை தேர்தல் ஆணையம் செய்கிறது. நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது வாக்குப்பதிவு தேதியை அவசியம் இல்லாமல் தேர்தல் ஆணையம் மாற்றியது. பா.ஜ.க. மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளின் விருப்பத்துக்கு ஏற்ப அனைத்தும் செய்து தரப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் தேதியை பா.ஜ.க.வின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

தேர்தலையொட்டி போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து உயரதிகாரிகளும் உள்ளூரை சேர்ந்தவர்கள். அவர்கள் நியாயமான, பாரபட்சமற்ற முறையில் தேர்தல் நடத்துவதை உறுதிப்படுத்துவர் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். கடந்த 1987ல் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்போது நடைபெற்ற தேர்தல் முறைகேடுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட ரத்தக்களரி இன்றளவும் நிற்கவில்லை.எனினும், தற்போது சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப் பணியாளர்கள் அனைவரும் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த துணைநிற்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story