காவிரி பிரச்சினைக்கு மேகதாது அணை மட்டுமே ஒரே தீர்வு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


காவிரி பிரச்சினைக்கு மேகதாது அணை மட்டுமே ஒரே தீர்வு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினைக்கு மேகதாது அணை மட்டுமே ஒரே தீர்வு என துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு

காவிரி பிரச்சினைக்கு மேகதாதுவில் அணை கட்டுவது மட்டுமே ஒரே தீர்வு என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

துணை முதல்-மந்திரியும், நீர்ப்பாசனத்துறை மந்திரியுமான டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

மேகதாது அணையே தீர்வு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்காக தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தொழில் நுட்ப குழு ஆகும். ஆனால் காவிரி பிரச்சிைனக்கு மேகதாதுவில் அணை கட்டுவது மட்டும் தான் ஒரே தீர்வு ஆகும். மேகதாதுவில் அணை கட்டியிருந்தால், தண்ணீர் பங்கிட்டு பிரச்சினை எழுந்திருக்காது.

கடந்த ஆண்டு கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட 400 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. ஆனால் மேகதாதுவில் அணை கட்டியிருந்தால் அந்த தண்ணீரை சேமித்து வைத்து, தற்போது எழுந்துள்ள பிரச்சினையை தீர்த்திருக்கலாம். ஏனெனில் மேகதாது அணையில் சேமிக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த சாத்தியமில்லை.

கோர்ட்டு உத்தரவுக்கு மதிப்பு

மேகதாது அணையில் சேமிக்கும் தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது இருமாநிலங்கள் இடையே எழுந்திருக்கும் பிரச்சினையை சரி செய்ய மேகதாது அணை உதவியாக இருந்திருக்கும். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கோர்ட்டு உத்தரவு மதிப்பளித்து கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டோம். அதே நேரத்தில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்

தமிழ்நாடு தங்களுக்கான தண்ணீரை என்ன தேவைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள முடியும். அதுகுறித்து கர்நாடக அரசு கேட்க முடியாது. அதற்கான சாத்தியமும் இல்லை. ஆனால் கர்நாடகத்தில் மழை குறைவாக பெய்திருப்பதுடன், அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக இருக்கும் போது தமிழ்நாடு எச்சரிக்கையாக தண்ணீரை பயன்படுத்தவேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story