வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் பற்றி ஊடகங்கள் புறக்கணித்து விட்டன: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு


வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் பற்றி ஊடகங்கள் புறக்கணித்து விட்டன:  ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
x

பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய மும்பையில் இருந்து இந்தியா தலைவர்கள் சபதமெடுக்க வேண்டும் என சரத் பவார் கூறினார்.

மும்பை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாத யாத்திரை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை காஷ்மீரில் முடிந்தது.

4 ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்த இந்த யாத்திரையை தொடர்ந்து, மணிப்பூரில் இருந்து மராட்டிய தலைநகர் மும்பை வரையிலான 2-வது கட்ட யாத்திரையை அவர் மேற்கொண்டார். இந்த யாத்திரை கடந்த ஜனவரி 14-ந்தேதி தொடங்கியது. எனினும், இந்த யாத்திரையில் மக்களுடனான அவருடைய சந்திப்பு, பெருமளவில் திறந்தவெளி வாகனத்தில் பயணம் மேற்கொண்டபடியே நடந்தது.

இறுதியாக, தானே நகர் வழியே மும்பைக்கு அவர் நேற்று வந்து சேர்ந்ததும் அவருடைய யாத்திரை நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, மும்பையின் சிவாஜி பார்க்கில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் நிறைவு விழா பேரணி இன்று நடந்தது. இதில், இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில், ராகுல் காந்திக்கு தமிழக முதல்-மந்திரி மு.க. ஸ்டாலின் சால்வை போர்த்தி பரிசு வழங்கினார். பேரணியில் மு.க. ஸ்டாலின் பேசும்போது, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயரை இந்தியா என பெயரிட்டதும், பயத்தில் இந்தியா என்ற பெயரின் பயன்பாட்டை பா.ஜ.க. நிறுத்தி கொண்டது என்று கூறினார்.

இந்த பேரணியில் ராகுல் காந்தி பேசும்போது, மக்களுடன் தொடர்பு கொள்ளவே, இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினேன். ஏனெனில், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் போன்ற விவகாரங்கள் பற்றி ஊடகங்கள் பேசாமல் புறக்கணித்து விட்டன என பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே பேசும்போது, மோடியின் உத்தரவாதம் பணக்காரர்களுக்கானது. எங்களுடைய உத்தரவாதம் பொதுமக்களுக்கு உரியது என கூறினார். சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே பேசும்போது, மக்கள் ஒன்றுபடும்போது, சர்வாதிகாரம் முடிவுக்கு வருகிறது என்றார்.

மும்பையில் இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு மகாத்மா காந்தி அழைப்பு விடுத்ததுபோல், பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய மும்பையில் இருந்து இந்தியா தலைவர்கள் சபதமெடுக்க வேண்டும் என சரத் பவார் கூறினார்.

சதி திட்டத்தின் ஒரு பகுதியாக என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டார் என ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கூறியுள்ளார்.

அரசியலமைப்பை மாற்றுவதற்காக 400-க்கும் கூடுதலான மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க. பேசி கொண்டிருக்கிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி பேசியுள்ளார். ராகுல் காந்தியின் பெயரிலுள்ள காந்தி பெயரை பார்த்து பா.ஜ.க.வினர் பயப்படுகிறார்கள் என்றும் அப்போது அவர் கூறினார்.

ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறும்போது, அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. அமைப்புகளின் உதவியுடன் அரசாங்கங்கள் கவிழ்க்கப்படுகின்றன. எங்களுடைய போராட்டம் ஆனது, வெறுப்புணர்வு நம்பிக்கைகளுக்கு எதிரானதேயன்றி, தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி அல்லது அமித்ஷாவுக்கு எதிரானதல்ல என்று பேசினார்.


Next Story