பாட்னா எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக மாயாவதி அறிவிப்பு..!
பாட்னா எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோ,
பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நாளை (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
பாட்னாவுக்கு வரும் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தலைவர்கள் நாளை மதியத்துக்குள் பாட்னா சென்று சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். சிரோமணி அகாலிதளம், பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தங்களது நிலைப்பாட்டை இதுவரை வரை தெரிவிக்கவில்லை குறிப்பிடத்தக்கது.