ஹோலி பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சியாச்சின் பனி மலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
புதுடெல்லி,
ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது-
"நாட்டு மக்களுக்கு ஹோலி திருநாள் வாழ்த்துக்கள். இந்த நல்லிணக்க திருவிழா இந்தியாவின் விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாகும். இந்த வண்ணத் திருவிழா, நாட்டு மக்களிடையே அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை மேலும் வலுப்படுத்தி, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வர வேண்டும் என நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
அதேபோல பிரதமர் மோடி கூறுகையில், "நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துகள். பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்" என்று வாழ்த்தியுள்ளார்.