கர்நாடகாவில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு - 144 தடை உத்தரவு
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டின் மீதும் போலீசார் மீதும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் ஷிகாரிபுராவில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பஞ்சாரா சபாஜ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எடியூரப்பா வீட்டில் இருந்த பாஜக கொடியை அகற்றிவிட்டு பஞ்சாரா சமூகத்தினர் கொடியை ஏற்றினர்.
பழங்குடியின சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமூகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்சி பிரிவினருக்கிடையிலான உள் இடஒதுக்கீடு தொடர்பான ஏ.ஜே.சதாசிவா குழுவின் அறிக்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மாநில அரசின் முடிவை எதிர்த்து பஞ்சாரா சமூகத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
அப்போது, பஞ்சாரா சமூகத்தினர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதற்கிடையில், காவல் கண்காணிப்பாளர் ஜி கே மிதுன் குமார் நகருக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் எடியூரப்பா மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் உருவம் பொறித்த போஸ்டர்களை எரித்தனர். வன்முறையின் போது ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும் ஷிகாரிபூர் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஷிகாரிபூர் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.