ஒரு மாணவிக்கு மட்டும் கூடுதல் மார்க்: பொங்கி எழுந்த சட்டக்கல்லூரி மாணவிகள்
கல்லூரி முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறினர்.
இடுக்கி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் சட்டக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தகல்லூரியில் இரண்டாம் ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு செமஸ்டர் தேர்வில் சட்டவிரோதமாக ஆசிரியர் ஒருவர் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த மாணவிக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியது தொடர்பாக அந்த கல்லூரியில் படிக்கக்கூடிய 7 மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே கல்லூரி நிர்வாகம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏழு மாணவிகளை கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து, அந்த மாணவிகள் மீது ராகிங் குற்றமும் சுமத்தியுள்ளது.
இதனால் பொங்கி எழுந்த மாணவிகள் பலர் கல்லூரி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். ஏழு மாணவிகள் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை நீக்க வேண்டும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ராகிங் குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கே வந்த தொடுபுழா துணை போலீஸ் சூப்பிரண்டு முகமது ரியாஸ், தொடுபுழா தாசில்தார் பிஜி மோல், ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடமும், கல்லூரி முதல்வர் அனிதாஷம்சுவிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது மாணவிகளை கல்லூரியை விட்டு சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்வதாக கல்லூரி முதல்வர் கூறினார். போராட்டம் நடத்திய மாணவிகள் அதற்கு சம்மதிக்கவில்லை, கல்லூரி முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அப்பொழுதுதான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.
இதனையடுத்து தொடுபுழா சப் கலெக்டர் அருண் .எஸ் .நாயர், இடுக்கி எம்.பி.டீன்குரியா கோஸ், ஆகியோர் கல்லூரிக்கு வந்து மாணவிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பிறகு மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். மாணவிகளின் போராட்டத்தால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.