எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தது அம்பலம்: மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு - சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அனுமதி
எதிர்க்கட்சிகளை உளவு பார்த்ததாக, டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி,
எதிர்க்கட்சிகளை உளவு பார்த்ததாக தெரிய வந்ததால், டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா, டெல்லி மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் பிடியில் சிக்கி உள்ளார். கடந்த 19-ந் தேதி அவர் சி.பி.ஐ. முன்பு ஆஜராக வேண்டி இருந்தது. அவர் ஒரு வாரம் அவகாசம் கேட்டதால், வருகிற 26-ந் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணிஷ் சிசோடியா புதிய வழக்கில் சிக்கி உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மணிஷ் சிசோடியா ஏற்பாட்டில், 'பீட்பேக் யூனிட்' (Feedback Unit) என்ற அமைப்பை டெல்லி அரசு அமைத்தது. டெல்லி அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணித்து, ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதே இந்த அமைப்பின் நோக்கம்.
ஆனால், அந்த அமைப்பின் அதிகாரிகள் நியமனத்துக்கு கவர்னர் ஒப்புதல் பெறப்படவில்லை. துறைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு பதிலாக, ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் நலன்களுக்காக அந்த அமைப்பு செயல்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர்பான அரசியல் உளவு தகவல்களை சேகரித்துள்ளது. அதே சமயத்தில், அரசுத்துறைகளின் ஊழல் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முழுமையான விதிமீறல்கள் நடந்துள்ளன. சி.பி.ஐ. நடத்திய பூர்வாங்க விசாரணையில் இத்தகவல் தெரிய வந்தது.
இந்த தகவல்களுடன் கூடிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. சமர்ப்பித்தது. அதை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவின் முதன்மை செயலாளருக்கு கடிதம் மூலம் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இதுதொடர்பாக மணிஷ் சிசோடியா கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எதிரிகளுக்கு எதிராக பொய் வழக்குகளை பதிவு செய்வது, ஒரு பலவீனமான, கோழைத்தனமான மனிதருக்கு அடையாளம். ஆம் ஆத்மி தலைவர்கள் மீது எவ்வளவுக்கு எவ்வளவு வழக்குகள் தொடரப்படுகிறதோ, அந்த அளவுக்கு ஆம் ஆத்மி வளரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.