மணிப்பூர்: விடுமுறையில் வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் கடத்தி கொலை; மர்ம நபர்கள் அட்டூழியம்


மணிப்பூர்:  விடுமுறையில் வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் கடத்தி கொலை; மர்ம நபர்கள் அட்டூழியம்
x

மணிப்பூரில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த ராணுவ வீரரை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்துள்ளனர்.

புதுடெல்லி,

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் வசித்து வந்தவர் செர்தோ தங்தங் கோம். ராணுவத்தில் வீரராக பணியாற்றிய இவர், விடுமுறையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் நேற்று காலை 10 மணியளவில் கோமை கடத்தி சென்றனர். அப்போது, அவருடைய 10 வயது மகன் இதனை பார்த்துள்ளான். சம்பவத்தின்போது, ஒரே சாட்சியான கோமின் மகன் போலீசாரிடம் கூறும்போது, 3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர்.

அப்போது, அவர்கள் இருவரும் வீட்டின் முகப்பு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த மர்ம நபர்கள் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கோமின் தலையில் வைத்து, வெள்ளை நிற வாகனம் ஒன்றில் ஏற்றி சென்றனர் என கூறியுள்ளார்.

கோமின் உடல் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மோங்ஜாம் பகுதியில் இருந்து கிழக்கே உள்ள குனிங்தெக் என்ற கிராமத்தில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அவருடைய உடலை சகோதரர் மற்றும் உறவினர் அடையாளம் காட்டினர். அவரது தலையில் துப்பாக்கி குண்டு காயம் ஒன்று காணப்பட்டது.

ராணுவ வீரருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். அவருடைய குடும்பத்தினருக்கு சாத்தியப்பட்ட வகையிலான உதவிகளும் செய்யப்படும் என ராணுவம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story