எஸ்.டி. பட்டியலில் மெய்தி சமூகத்தை சேர்க்கும் உத்தரவு ரத்து- மணிப்பூர் ஐகோர்ட்டு அதிரடி


எஸ்.டி. பட்டியலில் மெய்தி சமூகத்தை சேர்க்கும் உத்தரவு ரத்து- மணிப்பூர் ஐகோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 22 Feb 2024 5:26 PM IST (Updated: 22 Feb 2024 5:35 PM IST)
t-max-icont-min-icon

மெய்தி சமூகத்தை எஸ்.டி. பிரிவில் சேர்ப்பதை 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு முந்தைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்பால்:

மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தி சமூகத்தினருக்கு பட்டியலினப் பழங்குடியினர் (ST) அந்தஸ்து கோரிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பட்டியலினப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்த்து குகி பழங்குடியினர் தீவிர போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மெய்தி சமூகத்தினரை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க பரிசீலனை செய்யும்படி முன்னர் பிறப்பித்த உத்தரவை மணிப்பூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், மெய்தி சமூகத்தை எஸ்.டி. பிரிவில் சேர்ப்பதை 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தரவானது 200-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய இன அமைதியின்மைக்கு தூண்டுதலாக இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முந்தைய உத்தரவில் உள்ள சர்ச்சைக்குரிய பத்தியை நீக்குவதாக நீதிபதி அறிவித்தார். இந்த பத்தி உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் நிலைப்பாட்டுடன் முரணாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எஸ்.டி. பட்டியல் திருத்தங்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை சுட்டிக்காட்டி, முந்தைய உத்தரவை நீக்க வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.


Next Story