டெலிவரி ஊழியரை கொன்று ஐபோனை திருடிய வாடிக்கையாளர் - அதிர்ச்சி சம்பவம்
டெலிவரி ஊழியரை கொன்று 1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோனை வாடிக்கையாளரே திருடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் சின்ஹட் பகுதியை சேர்ந்தவர் கஜனன். இவர் ஆன்லைன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
அந்த ஐபோனை டெலிவரி ஊழியரான பரத் சாகு (30) என்பவர் கொண்டு சென்றுள்ளார். ஐபோனை வாடிக்கையாளரான கஜனனிடம் கொடுத்துள்ளார். மேலும், ஐபோனுக்கான பணம் 1.50 லட்ச ரூபாயை தரும்படி வாடிக்கையாளர் கஜனனிடம் டெலிவரி ஊழியர் பரத் சாகு கேட்டுள்ளார்.
அப்போது, கஜனனும் அவரது கூட்டாளியும் சேர்ந்து பரத் சாகுவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், அந்த ஐபோனை திருடிய கஜனனும் கூட்டாளியும் கொலை செய்யப்பட்ட பரத் சாகுவின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் வீசியுள்ளனர்.
வேலைக்கு சென்ற பரத் 2 நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வராதது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பரத்தை தீவிரமாக தேடினர்.
அப்போது, பரத் சாகு கடைசியாக கஜனனிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தேடிய நிலையில் அவரது நண்பரான ஆகாஷ் பிடிபட்டார். அப்போது ஆகாஷிடம் நடத்திய விசாரணையில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியர் பரத்தை தானும் நண்பர் கஜனனும் சேர்ந்து கொலை செய்து கால்வாயில் வீசியதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஆகாஷை கைது செய்தனர். மேலும், தலைமறைவன கஜனனை தீவிரமாக தேடி வருகின்றனர். கால்வாயில் வீசப்பட்ட பரத்தின் உடலையும் போலீசார் தேடி வருகின்றனர்.