மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவருக்கு ஒரு மாதம் சிறை - பெங்களூரு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
திருமணமான நாள் முதல் தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
விவாகரத்து கோரி பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் விவாகரத்து கோரி ஒரு தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கணவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயதுடையவர் வேலை செய்து வருகிறார்.
அவருக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதல் தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
அந்த பெண் வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு, அவரது கணவர் மின்னஞ்சல்(இ-மெயில்) மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பினார். மேலும் வீடியோக்களுடன் சேர்த்து ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் பெங்களூருவில் வசித்து வரும் தனது சகோதரரிடம் கூறி உள்ளார். இதையடுத்து அவரது சகோதரர் பெங்களூரு போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பிய அந்த பெண்ணும், தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு கூறினர்.
அதில், 'விவாகரத்து கோரி பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மனஉளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது' என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.