ஐக்கிய அரபு அமீரக உயர் அதிகாரி என கூறி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் கட்டணம் செலுத்தாமல் தப்பிய மோசடி ஆசாமி கைது
டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கி ரூ.23 லட்சம் கட்டணம் செலுத்தாமல் தப்பிய மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லியில் பிரசித்தி பெற்ற 'தி லீலா பேலஸ்' நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதியன்று, முகமது ஷெரீப் என்பவர் வந்தார். "நான் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் பலாஹ் பின் சயீத் அல் நஹ்யான் அலுவலகத்தில் முக்கியமான அதிகாரி" என்று சொல்லி அறை எடுத்தார். தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன் என்பதற்கான அடையாள அட்டையை வழங்கினார். விசிட்டிங் கார்டும் கொடுத்தார். அவரது நடை, உடை, பாவனை, வார்த்தைகளை ஓட்டல் நிர்வாகம் நம்பியது.
அவர் அறை எண். 427-ல் 4 மாதங்கள் தங்கினார். முதலில் ஆகஸ்டு மாதத்திலும், செப்டம்பர் மாதத்திலும் ஓட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் ஒரு பகுதியை அவர் (ரூ.11.5 லட்சம்) வழங்கினார்.
செப்டம்பர் மாதம் அறை வாடகையாக ரூ.23 லட்சத்து 48 ஆயிரத்து 413 செலுத்த வேண்டி வந்தது. அதற்கு அவர் ரூ.20 லட்சத்துக்கு காசோலை வழங்கினார். அந்த காசோலையை வங்கியில் ஓட்டல் நிர்வாகம் செலுத்தியபோது, கணக்கில் போதுமான பணம் இல்லை என்று கூறி போன வேகத்தில் திரும்பி வந்தது.
இந்த நிலையில் அவர் நவம்பர் 20-ந்தேதி ஓட்டல் பில்களுக்கு உரிய பணத்தை செலுத்தாமல் நைசாக ஓட்டலில் இருந்து தப்பினார். அத்துடன் அவர் ஓட்டலில் இருந்து வெள்ளி பாட்டில் ஹோல்டர்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் வாரிச்சுருட்டிக்கொண்டு தப்பியது பின்னர் தெரிய வந்தது.
இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகம், டெல்லி போலீசில் புகார் செய்தது. அந்தப் புகாரில், " ஓட்டலுக்கு அவர் அளித்த காசோலையின் மூலம் பாக்கி வந்து விடும் என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் அவர் திட்டமிட்டு ஏமாற்றி உள்ளார். அவர், தவறான நோக்கங்களுடன், ஏமாற்றுகிற தெளிவான நோக்கத்தையும் கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. லீலா பேலஸ் ஓட்டலில் திருட்டு, ஏமாற்றுமதல், மோசடி குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து லீலா பேலஸ் ஓட்டலை ஏமாற்றிய முகமது ஷெரீப், கர்நாடக மாநிலத்தில் உளள தட்சிண கன்னடாவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 19-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.