பீகார் முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாட்னா,
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமாரை சுட்டுக் கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து பாட்னா டி.எஸ்.பி. கிருஷ்ணா முராரி பிரசாத் கூறுகையில், "முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கடந்த பிப்ரவரி 14-ந்தேதி கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை பார்க் பகுதியில் வைத்து போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்" என்று தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர் எளிதில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தவறான வழியில் முயற்சி செய்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "நான் மும்பையில் படித்து வரும் ஒரு மாணவன். நான் பேசியது கோபத்தில் கூறிய கருத்து. ஆனால் எனக்கு எந்த தவறான நோக்கமும் கிடையாது. எனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என வேண்டுகிறேன். முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூட சட்டசபையில் அவர் பேசிய ஒரு கருத்துக்கு மன்னிப்பு கோரியிருந்தார்" என்று தெரிவித்தார்.
முன்னதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபையில் பெண் கல்வி மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை விவரிக்கும்போது தகாத வகையில் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.