விடுதியில் ரகசிய கேமரா பொருத்தி புதுமண தம்பதி தனிமையில் இருந்ததை படம் பிடித்த ஊழியர்: அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை


விடுதியில் ரகசிய கேமரா பொருத்தி புதுமண தம்பதி தனிமையில் இருந்ததை படம் பிடித்த ஊழியர்: அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை
x

விடுதியில் ரகசிய கேமரா பொருத்தி புதுமண தம்பதியின் அந்தரங்க காட்சிகளை படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திரூரை சேர்ந்த வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதி கடந்த மாதம் தேனிலவை கொண்டாடுவதற்காக மலப்புரத்துக்கு சுற்றுலா வந்தனர். ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்தபடி அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி தேனிலவை உற்சாகமாக கொண்டாடினர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று புதுமாப்பிள்ளை செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் கோழிக்கோட்டை சோ்ந்த அப்துல் முனீர் (வயது 35) பேசுவதாகவும், நீங்கள் மலப்புரத்தில் விடுதியில் மனைவியுடன் தங்கியபோது எடுத்த உங்களின் அந்தரங்க வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க ரூ.1½ லட்சம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை மலப்புரம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து அந்த வாலிபர் போலீசார் கூறியபடி அப்துல் முனீருக்கு கூகுள் பே மூலம் ரூ.2 ஆயிரம் அனுப்பியுள்ளார். மேலும், தற்போது தன்னிடம் பணமில்லை. அதனால் கைவசமுள்ள தங்க நகைகளை தருவதாக கூறிய அவர், நகைகளை எங்கு வந்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அப்துல் முனீர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி அழைத்துள்ளார்.

அதைதொடர்ந்து போலி கவரிங் நகைகளுடன் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அப்துல் முனீரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கேமரா, லேப்-டாப் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் அப்துல் முனீரிடம் நடத்திய விசாரணையில், புதுமண தம்பதி தங்கியிருந்த விடுதியில் ஊழியராக வேலை பார்த்ததும், தம்பதி தங்கி இருந்த அறையில் உள்ள கொசு கொல்லி எந்திரத்தில் ரகசிய கேமராவை பொருத்தி அந்தரங்க காட்சிகளை படம் பிடித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் அப்துல் முனீரை கோா்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story