பயிற்சி டாக்டர்களை சந்திக்க போராடும் இடத்திற்கே சென்றார் மம்தா பானர்ஜி


பயிற்சி டாக்டர்களை சந்திக்க போராடும் இடத்திற்கே சென்றார் மம்தா பானர்ஜி
x

உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தயவு செய்து பணிக்கு திரும்புங்கள் என்றும் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார்.

கொல்கத்தா,

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சிமருத்துவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வலியுறுத்தியும், சில அதிகாரிகளை பணிநீக்கம்செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிக்கு திரும்புமாறு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்த பிறகும், பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த் அழைப்பு விடுத்தார். இதில் 15 பேர் வரை பங்கேற்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால், ''30 பிரதிநிதிகளுக்கு அனுமதி வேண்டும். மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்'' என பயிற்சி மருத்துவர்கள் நிபந்தனை விதித்தனர். இதை அரசு ஏற்காததால் அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பயிற்சி மருத்துவர்கள் உடனான சந்திப்பில் மம்தா பானர்ஜி பங்கேற்பார் என மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த் மீண்டும் மின்னஞ்சல் அனுப்பினார். ஆனால், நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை அரசு ஏற்க மறுத்துவிட்டது. பேச்சுவார்த்தைக்காக 2 மணி நேரம் மம்தா பானர்ஜி காத்திருந்தார். ஆனால், பயிற்சி மருத்துவர்கள், நேரலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ஏற்காததால் சந்திக்க மறுத்தனர் .இதையடுத்து பேசிய மம்தா பானர்ஜி மக்களின் நலனுக்காக ராஜினாமா செய்ய தயராக இருப்பதாக கூறினார். இதற்கிடையே, கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நீடித்து வரும் நிலையில், இன்று போராடும் இடத்திற்கே மம்தா பானர்ஜி சென்றார். அப்போது, உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தயவு செய்து பணிக்கு திரும்புங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார்.


Next Story