மல்லிகார்ஜூன கார்கே வாழ்க்கை குறிப்பு


மல்லிகார்ஜூன கார்கே வாழ்க்கை குறிப்பு
x

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவின் வாழக்கை குறிப்பு வருமாறு:-

பெங்களூரு:

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவின் வாழக்கை குறிப்பு வருமாறு:-

மல்லிகார்ஜூன கார்கே

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று(வியாழக்கிழமை) கட்சியின் தலைவராக பதவி ஏற்கிறார். மல்லிகார்ஜூன கார்கே கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்தவர். வட கர்நாடகத்தில் பின்தங்கிய பீதர் மாவட்டத்தில் உள்ள வரவட்டி கிராமத்தில் கடந்த 1942-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ந் தேதி பிறந்தார். அவருக்கு தற்போது 80 வயது ஆகிறது.

அவர் கலபுரகி மாவட்ட தொழிலாளர் சங்க தலைவராக தனது பொது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு அவர் கடந்த 1969-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். அவர் கலபுரகி சிட்டி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் கபடி, ஹாக்கி விளையாட்டு வீரராகவும் இருந்தார். அதைத்தொடர்ந்து முதல் முறையாக கர்நாடக சட்டசபை தேர்தலில் கடந்த 1972-ம் ஆண்டு குருமித்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1976-ம் ஆண்டு பள்ளி கல்வித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைவர்

மீண்டும் அதே தொகுதியில் இருந்து 1978-ம் ஆண்டு 2-வது முறையாக கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவராஜ் அர்ஸ் மந்திரிசபையில் கிராம வளா்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். 1980-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த குண்டுராவ் மந்திரிசபையில் வருவாய்த்துறை மந்திரியாக பணியாற்றினார்.

1983-ம் ஆண்டு அதே தொகுதியில் இருந்து 3-வது முறையாக சட்டசபை தேர்தலில் பெற்றி பெற்றார். 1985-ம் ஆண்டு 4-வது முறையாகவும், 1989-ம் ஆண்டு 5-வது முறையாகவும், 1994-ம் ஆண்டு 6-வது முறையாகவும், 1999-ம் ஆண்டு 7-வது முறையாகவும், 2004-ம் ஆண்டு 8-வது முறையாகவும் கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2005-ம் ஆண்டு காநாடக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கலபுரகி தொகுதி

கடந்த 2008-ம் ஆண்டு சித்தாபுரா தொகுதியில் 9-வது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபை எதிா்க்கட்சி தலைவராகவும் செயலாற்றினார். கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று, மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பணியாற்றினார்.

மேலும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு பா.ஜனதா வேட்பாளரிடம் 95 ஆயிரத்து 452 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

ராஜினாமா செய்தார்

தோல்வியையே சந்திக்காத தலைவர் என்ற பெயர் பெற்ற அவர் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தார். கடந்த 2020-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்ட அவர் கடந்த 2021-ம் ஆண்டு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார். அவர் கலபுரகியில் உள்ள கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் வக்கீலாக பணியாற்றினார். அவர் புத்த மதத்தை பின்பற்றி வருகிறார். தலித் சமூகத்தை சேர்ந்த அவருக்கு கர்நாடக முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பு பல முறை வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் அந்த பதவி கைநழுவி போனது. ஆனால் அவர் கட்சிக்கு எதிராக செயல்படவில்லை. இதுவே அவர் மீதான காங்கிரஸ் மேலிடத்தின் மரியாதையை அதிகரித்தது. 50 ஆண்டு காலம் காங்கிரசில் விசுவாசமிக்க தொண்டராக, தலைவராக இருந்துள்ளார். அவருக்கு பரிசாக கட்சியின் உச்சபட்ச பதவி கிடைத்துள்ளது.

பிரியங்க் கார்கே

அவர் கடந்த 1968-ம் ஆண்டு மே மாதம் 13-ந் தேதி ராதாபாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் பிரியங்க் கார்கே கர்நாடக காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியில் உள்ளார். முன்னாள் மந்திரியான அவர் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தை சேர்ந்த நிஜலிங்கப்பாவுக்கு அடுத்ததாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது. ஜெகஜீவன் ராமுக்கு அடுத்ததாக தலித் சமூகத்தை சேர்ந்த கார்கே காங்கிரசின் உச்சபட்ச பதவியை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தாய்மொழி கன்னடத்துடன் இந்தி, மராட்டி, ஆங்கிலம், உருது மொழிகளை சரளமாக பேசும் திறன் கொண்டவர் ஆவார்.


Next Story