18 மாநிலங்களுக்கு ரூ.6,366 கோடியை நிலுவையில் வைத்துள்ளது - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
100 நாள் வேலை திட்டத்தில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இன்னும் ரூ.6,366 கோடி பாக்கி வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை (100 நாள் வேலை திட்டம்) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி செயல்படுத்தியது.
இந்த திட்டத்தை பா.ஜனதா தலைமையிலான தற்போதைய மத்திய அரசு முறையாக செயல்படுத்தவில்லை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
அந்தவகையில் இந்த திட்ட நிதியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கோடிக்கணக்கில் நிலுவையில் வைக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
இது தொடர்பாக கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் கூறியிருப்பதாவது:-
எங்கள் காங்கிரஸ்-ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2005-ம் ஆண்டு இதே நாளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டது.
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்ட நிதியில் 33 சதவீதத்தை மோடி அரசு குறைத்திருக்கிறது. அப்படி இருந்தபோதும் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த திட்ட நிதியில் இன்னும் ரூ.6,366 கோடியை நிலுவையில் வைத்திருக்கிறது.
தொழிலாளர்களின் ஆதாரம்
ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்ட இந்த முதன்மைத் திட்டம் இன்னும் 14.42 கோடி தொழிலாளர்களுக்கு ஆதாரமாக திகழ்கிறது. இதில் பாதிபேர் பெண்கள் ஆவர்.
கொரோனா தொற்றுநோய் கால பொதுமுடக்கத்தின்போது, கோடிக்கணக்கான தொழிலாளர்களின் உயிர்காக்கும் வலையாக இது இருந்தது. அவர்களின் வருமான இழப்பில் 80 சதவீதத்தை இந்த திட்டம் மூலம் ஈடுசெய்யப்பட்டது என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் புகழாரம்
இதைப்போல 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் கட்சியும் புகழ்ந்துரைத்து உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் 'எக்ஸ்' தளத்தில், '100 நாள் வேலை திட்டம் தொடங்கியதில் இருந்து லட்சக்கணக்கானவர்களுக்கு அது வாழ்வாதாரப் பாதுகாப்பை வழங்கியது. கொரோனா காலத்தில் 80 சதவீதம் வரையிலான வருமான இழப்பை ஈடுசெய்தது. மேலும் கடினமான காலங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைப்பதிலும் நேர்மறையான பங்களிப்பை செய்திருந்தது' என்று பெருமிதம் வெளியிடப்பட்டு இருந்தது.