ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சுவாதி மாலிவாலை பா.ஜ.க. மிரட்டியுள்ளது - ஆம் ஆத்மி


ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சுவாதி மாலிவாலை பா.ஜ.க. மிரட்டியுள்ளது - ஆம் ஆத்மி
x

கெஜ்ரிவாலுக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பெண் எம்.பி. சுவாதி மாலிவாலை பா.ஜ.க. மிரட்டியுள்ளது என்று ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லி,

ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த 13ம் தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் அளித்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என்று மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் பிபவ் குமார் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

சுவாதி மாலிவாலின் புகார் தொடர்பாக கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதேவேளை, சுவாதி மாலிவால் மீது பிபவ் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். சிவில் லைன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பிபவ் குமார் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு முன் அனுமதி பெறாமல், சுவாதி மாலிவால் அத்துமீறி உள்ளே நுழைந்தார். மேலும், தகாத வார்த்தைகளாலும், மிரட்டல் விடும் வகையிலும் பேசினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தேர்தல் நேரம். அதனால், மாலிவால் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்க கூடும். மாலிவால் அளித்த புகாரின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதற்கான சாத்தியம் உள்ளது அதை விசாரிக்க வேண்டும் என்று பிபவ் குமார் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பூதாகாரமாகி வரும் நிலையில் சுவாதி மாலிவாலை தாக்கிய புகாரில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை போலீசார் இன்று கைது செய்தனர். கெஜ்ரிவாலின் வீட்டில் இருந்த பிபவ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பெண் எம்.பி. சுவாதி மாலிவாலை பா.ஜ.க. மிரட்டியுள்ளது என்று ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி கல்வித்துறை மந்திரியான அதிஷி கூறியதாவது,

அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ள சுவாதி மாலிவால் சட்டவிரோத பணியாளர் தேர்வு வழக்கில் கைது நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பெண் எம்.பி. சுவாதி மாலிவாலை பா.ஜ.க. மிரட்டியுள்ளது. உரிய முன் அனுமதியின்றி முதல்-மந்திரியின் வீட்டிற்கு சுவாதி மாலிவால் சென்றுள்ளார். முன் அனுமதியின்றி சுவாதி மாலிவால் முதல்-மந்திரியின் வீட்டிற்கு சென்றது ஏன்? அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினம் அதிக வேலை செய்துகொண்டிருந்தார். இதனால், அவர் மாலிவாலை சந்திக்கவில்லை. முதல்-மந்திரியை சுவாதி அன்றைய தினம் சந்தித்திருந்தால் பிபவ் குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் கெஜ்ரிவால் மீது சுமத்தியிருப்பார்.

பா.ஜ.க.வின் சதித்திட்டத்தின் முகமாக சுவாதி மாலிவால் உள்ளார். பா.ஜ.க.வுக்கென்று தனி பாணி உள்ளது. முதலில் வழக்குப்பதிவு செய்வார்கள். பின்னர் அரசியல் தலைவர்களை சிறையில் தள்ளுவோம் என மிரட்டுவார்கள். சட்டவிரோத பணியாளர் நியமனம் தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு பதிவு செய்த வழக்கை சுவாதி மாலிவால் எதிர்கொண்டுள்ளார். இதில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கில் சுவாதி மாலிவால் கைது நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

சுவாதி மாலிவாலை பா.ஜ.க. மிரட்டியுள்ளது. கெஜ்ரிவாலுக்கு எதிரான சதித்திட்டத்தின் முகமாக மாலிவாலை மாற்றியுள்ளது. டெல்லி போலீஸ் நடுநிலையுடன் செயல்பட்டால் மாலிவாலுக்கு எதிராக பிபவ் குமார் கொடுத்த புகார் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.அத்துமீறி நுழைதல், பாதுகாப்பை மீறுதல் மற்றும் ஒரு அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாலிவால் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்யுமா? டெல்லி போலீஸ் நடுநிலையுடன் செயல்பட்டால் பிபவ் கொடுத்த புகார் தொடர்பாக மாலிவால் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மாலிவால் கொடுத்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று பிபவ் குமார் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

எந்தந்த பா.ஜ.க. தலைவர்களுடன் மாலிவால் பேசியுள்ளார் என்பது குறித்து அவரின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story