ராஜ் தாக்கரேவுக்கு சிறுபாதிப்பு ஏற்பட்டாலும் மராட்டியம் கொந்தளிக்கும்- நவநிர்மாண் சேனா பதாகை


ராஜ் தாக்கரேவுக்கு சிறுபாதிப்பு ஏற்பட்டாலும் மராட்டியம் கொந்தளிக்கும்- நவநிர்மாண் சேனா பதாகை
x

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் மராட்டியம் கொந்தளிக்கும் எனமும்பையில் நவநிர்மாண் சேனா வைத்துள்ள பதாகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதா எதிர்ப்பு

நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வருகிற 5-ந் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தநிலையில் அவரின் அயோத்தி வருகைக்கு உத்தரபிரதேச பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

ராஜ் தாக்கரே அயோத்திக்கு வரும் முன்பு வட இந்தியர்களை அவமதித்ததற்காக அவர்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரை அயோத்தியில் அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்து உள்ளார்.

பதாகை

இந்தநிலையில் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர்களில் ஒருவரான சந்தேஷ் நலவாடே என்பவர் மும்பை லால்பாக் பகுதியில் பதாகை ஒன்றை வைத்துள்ளார். அதில், "நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் தலைமுடிக்கு கூட பாதிப்பு ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த மராட்டியமும் கொந்தளிக்கும். கடும் பின்விளைவுகள் ஏற்படும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த பதாகையில் ராஜ் தாக்கரே, அரவது மகன் அமித் மற்றும் நவநிர்மாண் சேனா தலைவர் பாலா நந்தகாவ்ங்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

மிரட்டல் கடிதம்

முன்பு மசூதியில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்த போது, அவருக்கு மர்ம நபர் மிரட்டல் கடிதம் அனுப்பினார். அப்போது பாலா நந்தகாவ்ங்கர், " ராஜ் தாக்கரேவுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் மராட்டியம் பற்றி எரியும்" என இதேபோன்ற கருத்தை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தது மற்றும் தற்போது அவரது அயோத்தி பயண திட்டம் போன்றவை மூலம் இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவை ஓரம் கட்டும் முயற்சியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story