ஷ்ரத்தா கொலை எதிரொலி: வீட்டை விட்டு ஓடிப்போன பெண்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு படை - மராட்டிய அரசு நடவடிக்கை!
சிறுமிகளுக்காக தனிப்படை அமைக்க மகளிர் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் நடந்த ஷ்ரத்தா கொலை சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது.
மும்பை வசாய் பகுதியை சேர்ந்த கால்சென்டர் ஊழியர் ஷரத்தா (வயது26). இவரை காதலன் அப்தாப் அமீன் கடந்த மே மாதம் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார். மேலும் அவர் ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின்னர் அதை சிறிது, சிறிதாக தூக்கி எறிந்து உள்ளார்.
இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த கொடூர படுகொலை சம்பவத்தையடுத்து சிறுமிகளுக்கு உதவ மராட்டிய மாநில அரசு சிறப்பு படையை அமைக்க உள்ளது.தங்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்ளும் சிறுமிகளுக்காக தனிப்படை அமைக்க வேண்டும் என மகளிர் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெண்கள் ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து, வீட்டை விட்டு ஓடிப்போன அனைத்து பெண்களுக்கு ஆதரவாக ஒரு குழுவை உருவாக்கும்.
மராட்டிய மாநில அரசில் அமைச்சராக உள்ள மங்கள் பிரபாத் லோதா கூறியதாவது, இளம்பெண்களுக்காக ஒரு குழு அமைக்க மாநில மகளிர் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம். சமீபத்தில் டெல்லியில் நடந்த வழக்கில், சிறுமிகளுக்கு 18 வயதாகும்போது, அவர்களை குடும்பத்தினரோ, போலீசாரோ தடுக்க முடியாது என்பதை நாம் பார்த்தோம். அத்தகைய சூழ்நிலையில், அவள் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறாள். இந்த நடவடிக்கைக்குப் பிறகு குடும்பத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பது இந்த சிறுமிகளுக்குத் தெரியும்.
இதுபோன்ற சூழ்நிலையில், மற்ற சிறுமிகளுக்கு இதுபோன்று நடக்காமல் இருப்பதை இந்த குழு உறுதி செய்யும். இந்த குழு அத்தகைய சிறுமிகளுக்கு தேவைப்படும் போது அவர்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்பை வழங்கும் என்று கூறினார்.