மராட்டியம்: மருந்து கம்பெனி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு


மராட்டியம்: மருந்து கம்பெனி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 Nov 2023 2:29 PM IST (Updated: 4 Nov 2023 4:10 PM IST)
t-max-icont-min-icon

கட்டிடத்தில் மேலும் சில ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என்பதால் தேடும் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது.

மும்பை:

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம், மகத் பகுதியில் அமைத்துள்ள மருந்து நிறுவனமான ப்ளூ ஜெட் ஹெல்த்கேர் லிமிடெட் கம்பெனி வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த கட்டிடத்திற்குள் ஊழியர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தீயணைப்பு மீட்பு படை மற்றும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை நிலவரப்படி தீ விபத்தில் சிக்கிய 4 ஊழியர்கள் சடலமாக மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இன்று காலை மேலும் 3 ஊழியர்களின் உடல்களை மீட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கட்டிடத்தில் மேலும் சில ஊழியர்கள் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் தேடும் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கட்டிடத்தின் தீ விபத்திற்கு எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என்றும், சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயனங்களால் தீ பரவியிருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் நிறுவனத்தின் சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளிவரவில்லை.


Next Story