தண்ணீர் வரி செலுத்த தவறியதால் எருமை மாட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள்
மத்தியப் பிரதேசத்தில் தண்ணீர் வரி செலுத்த தவறியதால் பால் பண்ணை வைத்திருக்கும் நபரின் எருமை மாட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குவாலியர்,
மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் தண்ணீர் வரி செலுத்தத் தவறியதால் பால் பண்ணை வைத்திருக்கும் நபர் ஒருவரின் எருமை மாட்டை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்துள்ளனர்.
டேலியன் வாலா பகுதியைச் சேர்ந்த பால்கிஷன் பால் என்ற நபர் பால் பண்ணை நடத்தி வருகிறார். அவர் ரூ.1.39 லட்சம் தண்ணீர் வரி பாக்கி செலுத்தாமல் காலதாமதம் செய்துள்ளார். இதனால் அவருக்கு மாநகராட்சி பொது சுகாதாரப் பொறியியல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தண்ணீர் வரி பாக்கியை செலுத்துமாறு பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டும் அவர் செலுத்தவில்லை. இதையடுத்து மாநகராட்சி பொது சுகாதாரப் பொறியியல் துறை நிலுவைத் தொகையை குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்துமாறு அவருக்கு இறுதி அறிவிப்பை வெளியிட்டு எச்சரித்துள்ளது.
ஆனால் அதற்குப் பிறகும் பால்கிஷன் தண்ணீர் வரி செலுத்தாததால் அதிகாரிகள் குழு அவரது இடத்திற்குச் சென்று அவரது எருமை மாட்டை பறிமுதல் செய்தனர். வழக்கமாக கடன் செலுத்தாதவர்களிடமிருந்து சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி பாக்கிகளை வசூலிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.