மத்திய பிரதேசம்: சூறாவளியில் பறந்த 25 அடி உயர சிலைகள்; பா.ஜ.க. மீது காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டு


மத்திய பிரதேசம்:  சூறாவளியில் பறந்த 25 அடி உயர சிலைகள்; பா.ஜ.க. மீது காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டு
x

மத்திய பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி, 25 அடி உயர சிலைகள் உடைந்த நிலையில், பா.ஜ.க. மீது காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

போபால்,

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஏற்பட்ட திடீர் பருவநிலை மாற்றம் எதிரொலியாக நேற்று மாலை அரை மணிநேரம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போது வீசிய சூறாவளி புயலால், மகாகால் லோக் பகுதியில் இருந்த 7 முனிவர்களின் சிலைகளில் 6 சிலைகள் பலத்த காற்றின் வேகத்தில் உடைந்து விழுந்தன. எனினும், பக்தர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடியால் மகாகால் லோக் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், 10 முதல் 25 அடி உயரத்திற்கு 155 சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பலத்த சூறாவளியால், 6 சிலைகள் உடைந்து விழுந்து உள்ளன. இதற்கு காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், பா.ஜ.க. மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

கோடிக்கணக்கான மதிப்பில் உருவான இவற்றில் நிறைய ஊழல் நடந்து உள்ளன என காங்கிரஸ் நகர தலைவர் ரவி பதோரியா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

எனினும், மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா இன்று கூறும்போது, இது ஒரு பேரிடர். சிலைகளுக்கு ஐந்து ஆண்டு உத்தரவாத காலம் உள்ளது. அதனால், ஒப்பந்ததாரர் அவற்றை சரி செய்து மீண்டும் உருவாக்கி, பழுது நீக்கி தருவார் என கூறியுள்ளார்.

கொரோனா உள்பட பேரிடரின்போது கூட சமூக ஊடகத்தில் மட்டுமே வரும் அவர்கள் ஒருபோதும் உதவி செய்தது கிடையாது. கேள்விகள் மட்டுமே எழுப்புபவர்கள் அவர்கள் என கடுமையாக சாடியுள்ளார்.


Next Story