மத்தியப் பிரதேசம்: கட்னி மாவட்டத்தின் தூய்மை இந்தியா திட்ட தூதராக 13 வயது சிறுவன் நியமனம்
மத்தியப் பிரதேசத்தில் கட்னி மாவட்டத்தின் தூய்மை இந்தியா திட்ட தூதராக 13 வயது சிறுவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்னி,
மத்தியப் பிரதேசத்தில் தூய்மை குறித்து 13 வயது சிறுவன் எழுதிய கடிதத்தால் ஆச்சரியமடைந்த கட்னி மாவட்ட கலெக்டர் அம்மாவட்டத்தின் தூய்மை இந்தியா திட்ட தூதராக அந்த சிறுவனை நியமித்துள்ளார்.
சி.எம். ரைஸ் மாதிரி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அசுதோஷ் மாங்கே. இவர் குப்பை வண்டிகளை பராமரிப்பது மற்றும் பொதுத் தூய்மை குறித்த தன்னுடைய ஆலோசனைகளை அஞ்சல் அட்டையில் எழுதி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பினார்.
இந்த கடிதத்தை படித்த பின்னர், அசுதோசை அலுவலகத்திற்கு வரவழைத்த கலெக்டர் அவி பிரசாத், அவரை கட்னி மாவட்டத்தின் தூய்மை இந்தியா திட்ட தூதராக நியமித்தார்.
இது குறித்து கலெக்டர் கூறும்போது, "கடிதத்தில் இருந்த ஆலோசனைகளைப் படித்த பிறகு, அதை எழுதிய சிறுவனை சந்திக்க விரும்பினேன். அவரைச் சந்தித்த போது, அவர் மிகவும் திறமையாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதைக் கண்டேன். எனவே, அவரை கட்னியின் தூய்மை இந்தியா திட்ட தூதராக நியமிக்க முடிவு செய்தேன்" என்று கூறினார்.