நேருவின் 2 பெரும் பிழைகளால் ஜம்மு காஷ்மீருக்கு பாதிப்பு - அமித்ஷா கடும் தாக்கு
நேரு மீதான அமித்ஷாவின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில், ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் மீது 2 நாட்களாக விவாதம் நடந்தது. அதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 70 ஆண்டுகளாக துரோகம் இழைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு நீதியும், உரிமைகளும் அளிப்பதற்காக 2 மசோதாக்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இடம் பெயர்ந்த காஷ்மீரி சமூகத்தினருக்கு சட்டசபையில் 2 இடங்களும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படும். முதல்முறையாக, எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்படும்.
காஷ்மீர் மறுசீரமைப்புக்கு பிறகு, ஜம்முவில் தொகுதிகள் எண்ணிக்கை 37-ல் இருந்து 43 ஆகவும், காஷ்மீரில் தொகுதிகள் எண்ணிக்கை 46-ல் இருந்து 47 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு காஷ்மீரும் நமது பகுதி என்பதால், அங்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தொடுத்த 3 போர்கள் காரணமாக, 41 ஆயிரத்து 844 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. அவர்களுக்கும், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கும் உரிமைகளும், பிரதிநிதித்துவமும் அளிக்க இம்மசோதாக்கள் வகை செய்கின்றன.
இங்கே பயன்படுத்தப்பட்ட 'நேருவின் பிழை' என்ற வார்த்தையை நான் ஆதரிக்கிறேன். நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவரது 2 பெரும் பிழைகளால், காஷ்மீர் மக்கள் பல்லாண்டு காலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 1947-ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நமது ராணுவம் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபை அடைந்தபோது, நேரு திடீரென போர் நிறுத்தம் அறிவித்தார். இதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது.
3 நாட்கள் கழித்து போர் நிறுத்தம் அறிவித்து இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நம்மிடம் வந்து இருக்கும். ''போர் நிறுத்தம் அறிவித்தது தவறு'' என்று பின்னாளில் நேருவே தெரிவித்தார். அது நேருவின் தவறு அல்ல, பிழை. மற்றொரு பிழை, காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது. நமது பெரும்பகுதி நிலத்தை இழந்து விட்டோம். இது வரலாற்று பிழை.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு, ஒரு தற்காலிக ஏற்பாடுதான். எனவே, அது போய்த்தான் தீர வேண்டும். அதை நீக்குவதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை. மோடிக்கு தைரியம் இருந்ததால், அப்பிரிவை நீக்கினார். காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களால், இதுவரை 45 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2026-ம் ஆண்டுக்குள், காஷ்மீரில் பயங்கரவாத சம்பவமே இல்லாத நிலையை உருவாக்குவதுதான் மத்திய அரசின் இலக்கு.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார். 2026-ம் ஆண்டுக்குள், பயங்கரவாத சம்பவமே இல்லாத நிலை உருவாக்கப்படும்" என்று அவர் கூறினார்.
நேரு மீதான அமித்ஷாவின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து காஷ்மீர் தொடர்பான 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.