நேரலை சாத்தியமில்லை... மறுத்த மம்தா பானர்ஜி; 2-வது முறையாக பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி


நேரலை சாத்தியமில்லை... மறுத்த மம்தா பானர்ஜி; 2-வது முறையாக பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி
x

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில், அரசுடனான பேச்சுவார்த்தையை நேரலை செய்ய வேண்டும் என டாக்டர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கடந்த செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், முதலில் எங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும்.

அதன்பின்னரே, எங்களுடைய பணிநிறுத்தம் பற்றி பரிசீலனை செய்வோம். இல்லையெனில், மருத்துவமனைகளில் இன்று காணப்படும் நிலைமைக்கு அரசே பொறுப்பேற்க நேரிடும் என டாக்டர்கள் கூறினர்.

இந்த சூழலில், மருத்துவர்களின் பொதுக்குழு கூட்டத்தின்போது, அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலான தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர், அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்களில் கூறப்பட்டு இருந்தன.

இதேபோன்று, சுகாதார துறையின் முதன்மை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைத்தனர்.

ஆனால் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவது என டாக்டர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில், சால்ட் லேக் பகுதியில் அமைந்த மாநில சுகாதார துறையின் தலைமையகம், ஸ்வத்ய பவனுக்கு வெளியே டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

இந்த சூழலில், பேச்சுவார்த்தைக்கு வரும்படி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பேச்சுவார்த்தையை நேரலை செய்ய வேண்டும் என டாக்டர்கள் விடுத்த கோரிக்கையை அரசு ஏற்று கொள்ளவில்லை.

கோரிக்கை நிறைவேறாத சூழலில், முதல்-மந்திரியை சந்திக்க மருத்துவர்கள் மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி, நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டீர்கள். உங்களுக்காக நான் காத்திருக்கிறேன். ஆனால், பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை எனில், எதற்காக வந்தீர்கள்? என கேட்டுள்ளார். இதுபோன்று எனக்கு அவமதிப்பு உண்டாக்காதீர்கள்? என்றும் கூறினார். மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று கொள்வது என்பது சாத்தியமில்லாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

டாக்டர்களை 6 மணிக்கு சந்திக்க திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், 30 மருத்துவர்கள் கொண்ட குழு 45 நிமிட நேர காலதாமதத்திற்கு பின்னரே, காலிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு வந்தனர். ஆனால், 15 பேர் மட்டுமே வரும்படி அரசு அழைத்தது.

கோர்ட்டில் வழக்கு உள்ள சூழலில் நேரலைக்கு சாத்தியமில்லை. சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி பெற்று, இந்த சந்திப்பை வீடியோ பதிவு செய்து, அதன் நகல் ஒன்றை உங்களுக்கு தருவேன் என டாக்டர்களிடம் அவர் வேண்டுகோளாக கூறி விளக்கினார். வீட்டுக்கு உள்ளே வரும்படியும், மழையில் நனைய வேண்டாம் என்றும் கூறி பேச்சுவார்த்தைக்கு வரும்படி வலியுறுத்தினார். ஆனால், டாக்டர்கள் அதனை மறுத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால், 2-வது முறையாக பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடைந்துள்ளது.


Next Story