திரிபுராவில் இடதுசாரி கட்சிகள் பந்த்... பெரிய அளவில் ஆதரவு இல்லை


Tripura Left Front bandh
x

திரிபுரா முழுவதும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகின்றன.

அகர்தலா:

திரிபுரா மாநிலத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெற்கு திரிபுரா மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் பாதல் ஷில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த படுகொலைக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகளான இடதுசாரி முன்னணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு (பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. ஆனால், அவர்களின் போராட்டத்திற்கு மக்களிடையே பெரிய அளவில் ஆதரவு இல்லை. அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகின்றன.

இதுதொடர்பாக காவல்துறை உதவி தலைமை இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) ஆனந்த தாஸ் கூறியதாவது:-

இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தினால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. வாகன போக்குவரத்து வழக்கம்போல் உள்ளது. ரெயில்களும் வழக்கம்போல் இயங்குகின்றன. கடைகள், மார்க்கெட்டுகள் திறந்துள்ளன. இதுவரை அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. போராட்டத்தையொட்டி முக்கியமான பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story