குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 24 மாதங்களில் நிறைவடையும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் அடுத்த 24 மாதங்களில் நிறைவடையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா,
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. இதற்காக 2,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு முதற்கட்ட நில அளவீடு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்றது. குறிப்பாக கூடல்நகர், மாதவன்குறிச்சி, அமராபுரம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதள பணிகள் அடுத்த 24 மாதங்களில் நிறைவடையும் என்று கூறினார். மேலும் 2023-ம் ஆண்டு இறுதியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கான ஆளில்லா விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்றும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.