வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள்
பருவமழை பொய்த்ததால் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள்தண்ணீர் இன்றி பயிர்கள் வாடுகின்றன.
கோலார்
கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. தென்கர்நாடகத்தில் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள் வறட்சி பகுதிகளாக உள்ளன. அங்கு அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கின்றன.
பருவமழை முடிந்தும், எதிர்பார்த்த மழை பெய்யாததால், ஏற்கனவே நடவு செய்த பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன. மேலும், விளைநிலங்கள் ஈரப்பதமின்றி வறண்டு போய் வெடிப்பு ஏற்பட்டு காணப்படுகின்றன.
மேலும் மின்தடை மற்றும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கால்நடைகளுக்கு தீவனம் வழங்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகிறார்கள். கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
பருவமழை நல்ல பெய்யும் என எதிர்பார்த்து, வங்கிகளில் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள், தற்போது செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர். இதனால் அரசு தங்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.