பெண்ணை கடத்திய வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜர்
கடத்தல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் கடந்த 31-ந்தேதி நாடு திரும்பியபோது போலீசார் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்தனர்.
இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணை குழுவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் மீது பெண்ணை கடத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கடத்திய பெண்ணை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தல் வழக்கில் பவானியின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே இந்த கடத்தல் வழக்கில் பவானிக்கு கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. அதே சமயம் சிறப்பு விசாரணை குழுவினர் முன்பு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பவானிக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இன்றைய தினம் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி நேரில் ஆஜராகியுள்ளார்.