கேரளாவில் குண்டுவெடிப்பு: டெல்லி, மும்பை, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு


கேரளாவில் குண்டுவெடிப்பு: டெல்லி, மும்பை, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
x

கோப்புப்படம்

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த யெகோவாவின் சாட்சிகள் மாநாட்டில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைநகர் டெல்லி, மும்பை மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தை சுற்றியும் அமைந்துள்ள முக்கிய சந்தைகள், தேவாலயங்கள், ரெயில், மெட்ரோ நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல், மும்பை நகரம் முழுவதும் உயர் எச்சரிக்கை அறிவிப்பை காவல்துறை வெளியிட்டுள்ளது. பண்டிகை காலம், வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக மும்பையில் உள்ள யூதர்களின் மையமான சபாத் ஹவுசில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, உத்தரபிரதேச எஸ்டிஜி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரசாந்த் குமார் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கையாக இருக்க உத்தரவிட்டார். இதனால் அனைத்து பாதுகாப்பு ஏஜென்சிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.


Next Story