கேரளா ஐகோர்ட்டு வழக்கு விசாரணை; முதல் முறையாக யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு
கேரளா ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணை முதல் முறையாக யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரளா ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணை முதல் முறையாக யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களில் தலைமை அர்ச்சகர் பதவி தொடர்பாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் அனில் கே நரேந்திரன் மற்றும் பிஜி அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சின் சிறப்பு அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர்களில் ஒருவரான சிஜித் என்பவர் வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், மனுதாரரின் கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. குஜராத், கர்நாடகா, ஒரிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் பாட்னா ஐகோர்ட்டுகளில் நடைபெறும் வழக்கு விசாரணை யூடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.