உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி அன்று கேரளாவில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடந்த அன்று மட்டும் கேரளாவில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர். உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடந்த போது கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் தங்கள் ஆதரவு அணிக்காக பேனர்கள் அமைத்தும், பெரிய திரை அமைத்தும் போட்டியை ரசித்தனர்.
உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அன்று கேரளாவின் பல மாவட்டங்களில் கால்பந்து ரசிகர்கள் விடிய, விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அன்று இரவு குடிபோதையில் தகராறு செய்த ஏராளமானோர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடந்த அன்று மட்டும் கேரளாவில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கேரள மதுபான விற்பனை மைய (பெவ்கோ) தலைமை நிர்வாக இயக்குனர் யோகேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, கேரளாவில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 33 முதல் 34 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெறும். ஆனால் உலக கோப்பை இறுதி போட்டி நடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அன்று வழக்கத்தை விட ரூ.15 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் இன்று முதல் பத்து நாட்களுக்கு, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசால் நடத்தப்படும் 301 மதுக்கடைகள் மூலம் சுமார் ரூ.600 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஓணம் சீசனில், செப்டம்பர் 1 முதல் 7-ம் தேதி வரையில் 624 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.