பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை வருகிற 25-ந்தேதிக்குள் அகற்ற மாநகராட்சிக்கு 'கெடு'; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை வருகிற 25-ந்தேதிக்குள் அகற்ற மாநகராட்சிக்கு கெடு; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை வருகிற 25-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு கெடு விதித்து கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:

10 இடங்களில் மட்டுமே...

பெங்களூருவில் உள்ள சாலை பள்ளங்களை மூடுவது, ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கர்நாடக ஐகோர்ட்டில் விஜயன் உள்ளிட்டோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) அலோக் அராதே முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, அந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில், கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதியில் இருந்து ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகள் 10 இடங்களில் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பிரமாண பத்திரத்தை பார்த்து தலைமை நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

25-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும்

பின்னர் அவர் கூறும்போது, பெங்களூருவில் 602 இடங்களில் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து, கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக மாநகராட்சியே தெரிவித்துள்ளது. ஆனால் வெறும் 10 இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வருகிற 25-ந் தேதிக்குள் நகரில் உள்ள அனைத்து ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இதற்கான பணிகளை மாநகராட்சி என்ஜினீயர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறினால், அடுத்து கடுமையான உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 25-ந் தேதி தலைமை நீதிபதி அலோக் அராதே ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story