கர்நாடகா: தேர்தல் பிரசாரத்தில் காரில் இருந்து நிலைதடுமாறி சரிந்த சித்தராமையா
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா காரில் இருந்து நிலைதடுமாறி சரிந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன.
கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பேரணி, கட்சி பொது கூட்டம் போன்றவற்றிலும் கலந்து கொண்டு வருகின்றன. கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பிரசாரகர்களும் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா, விஜயநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்றார். அவர் காரில் அமர்வதற்காக உள்ளே ஏறியபோது, காரின் ஓரத்தில் நின்றபடி மக்களை நோக்கி கைகளை அசைத்த பின்பு, இறங்கி காரில் அமர போனார்.
அப்போது, அவர் நிலைதடுமாறினார். எனினும் அவர் தரையில் விழுந்து விடாமல் உடன் இருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து காருக்குள் அமர வைத்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி டுவிட்டரில் சித்தராமையா, வெளியிட்டு உள்ள செய்தியில், நான் நன்றாக இருக்கிறேன். கவலைப்பட தேவையில்லை. காருக்குள் நுழையும்போது சற்று நிலைநடுமாறி விட்டது என தெரிவித்து உள்ளார்.