கர்நாடகம் முழுவதும் இன்று முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. பெங்களூருவில் நடைபெறும் கோலாகல விழாவில் இந்த திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கிவைக்கிறார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. பெங்களூருவில் நடைபெறும் கோலாகல விழாவில் இந்த திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கிவைக்கிறார்.
பெண்களுக்கு இலவச பயணம்
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ ரேஷன் அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு தலா மாதம் ரூ.3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு தலா ரூ.1,500, பெண்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் ஆகிய 5 இலவச திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருப்பதால், 5 இலவச திட்டங்களையும் அமல்படுத்த முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான நடந்த மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் ஜூன் 11-ந் தேதி (அதாவது இன்று) முதல் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார்.
இன்று முதல் தொடக்கம்
அதாவது கர்நாடக போக்குவரத்து கழகங்களின் கீழ் செயல்படும் பெங்களூரு பி.எம்.டி.சி, கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம். அரசு சொகுசு பஸ்களான குளிர்சாதன வசதி, படுக்கை வசதிகள் கொண்ட பஸ்களை தவிர்த்து மற்ற அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது.
அதன்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. காங்கிரஸ் அரசின் முதல் திட்டம் என்பதால், இதனை கோலாகலமாக நடத்த முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளனர். அதன்படி இந்த திட்டத்தின் தொடக்க விழா பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் இன்று காலை 11.30 மணி அளவில் கோலாகலமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
கண்டக்டராக சித்தராமையா
இந்த திட்டத்தின் தொடக்க விழாவையொட்டி பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இன்று காலை 11 மணிக்கு விதானசவுதா வரை செல்லும் 43-ம் வழித்தட பி.எம்.டி.சி. பஸ்சில் முதல்-மந்திரி சித்தராமையா கண்டக்டராக இருந்து இலவச பயண திட்டத்திற்கான டிக்கெட்டை பெண்களுக்கு அவர் வினியோகிக்கிறார். மேலும் திட்டம் பற்றி பெண்களுக்கு விளக்கம் அளிப்பதுடன், அவர்களின் குறைகளையும் சித்தராமையா கேட்டறிகிறார்.
மெஜஸ்டிக்கில் இருந்து விதானசவுதாவுக்கு பஸ் சென்றதும், விதானசவுதாவில் வைத்து அரசு பஸ்சில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்து பேச உள்ளனர். மேலும் சக்தி திட்டத்திற்கான ஸ்மார்ட் கார்டுகளையும் அவர்கள் சில பெண் பயனாளிகளுக்கு வழங்குகிறார்கள். அத்துடன் சக்தி திட்டத்திற்கான இலச்சினையும் (லோகாவும்) வெளியிடப்பட இருக்கிறது.
மத்திய மந்திரிகளுக்கு அழைப்பு
காங்கிரஸ் அரசு கூறியப்படி 5 இலவச திட்டங்களில் முதல் திட்டத்தை இன்று நிறைவேற்றுவதால், விதானசவுதாவில் நடைபெறும் கோலாகல விழாவில் பங்கேற்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்க அரசு சார்பில் முறைப்படியான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசின் சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய மந்திரிகள் பங்கேற்பார்களா? என்பது இன்று மதியம் தான் தெரியும்.
முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் மெஜஸ்டிக்கில் இருந்து விதானசவுதா வரை வரும் பி.எம்.டி.சி. பஸ் நேற்று காலையில் விதானசவுதாவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த பஸ்சை போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
மதியம் 1 மணியில் இருந்து...
காங்கிரஸ் அரசின் சக்தி திட்டத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்த பின்பு, மதியம் 1 மணியில் இருந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். கர்நாடகத்தில் எந்த பகுதியில் இருந்தும், எங்கு வேண்டுமானாலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம். ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.
கர்நாடகத்திற்குள் மட்டுமே இந்த இலவச பயணம் மேற்கொள்ள முடியும். கர்நாடகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியாது. கர்நாடகத்தில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே சக்தி திட்டம் பொருந்தும். வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு உள்பட மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு வரும் பெண்கள் கர்நாடக அரசின் பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள முடியாது.
பிங்க் நிற டிக்கெட்
மத்திய, மாநில அரசுகள் வழங்கி இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை காட்டி அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம். இதற்காக பெண்களுக்கு பிங்க் நிற டிக்கெட் வழங்கப்படும். அதில், எங்கிருந்து எந்த பகுதிக்கு செல்கிறார்கள் என்பது பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் கட்டணம் இலவசம் என்று எழுதப்பட்டு இருக்கும். இதன்மூலம் பெண்கள் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்பதை போக்குவரத்து கழகங்கள் அறிந்து கொள்ள முடியும்.
பெங்களூருவில் சக்தி திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்கும் அதே நேரத்தில், மற்ற மாவட்டங்களில் மந்திரிகளும், தாலுகாக்களில் எம்.எல்.ஏ.க்களும் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர். கர்நாடகத்தில் அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் இன்று தொடங்கப்படுவதால் அனைத்து பெண்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.