கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x

கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரு, டிச.25-

ஹாவேரி மாவட்டம் சிக்காம்வியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தாக்கல் குறித்து இதுவரை நிதித்துறை அதிகாரிகளுடன் 2 முறை ஆலோசனை நடத்தி உள்ளேன். தற்போது பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் முடிந்ததும் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் பட்ஜெட் குறித்து ஆலோசிக்க உள்ளேன்.

இதுபோல், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களுடனும், விவசாய சங்கங்களுடனும் பட்ஜெட் குறித்து ஆலோசித்து, அவர்களது கருத்துகள் பெறப்படும். அடுத்த மாதத்தில் (ஜனவரி) இருந்து பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக சாகித்ய அகாடமி நிகழ்ச்சிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்கிறீர்கள். தற்போது உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

சாகித்ய அகாடமி நிகழ்ச்சி திறந்தவெளி பகுதியில் வைத்து தான் நடைபெற இருப்பதால், எந்த பிரச்சினையும் ஏற்படாது. இருப்பினும் சாகித்ய அகாடமி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story