கர்நாடக சட்டசபை தேர்தல்: நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடக்கம்
கர்நாடகத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடக்கிறது.
பெங்களூரு,
224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அத்துடன் ஆம் ஆத்மி 217 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 27-ந் தேதி முதல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கினர். பிரதமர் மோடி கடந்த 29-ந் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 30-ந்தேதி மற்றும் கடந்த 2, 3-ந் தேதி, பின்னர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை என மொத்தம் 7 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையாடினார்.
அதே போல் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உப்பள்ளியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டார். ராகுல் காந்தியும் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்த முறை கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி முதல் முறையாக ஈடுபட்டார். அவரது வருகை காங்கிரஸ் தலைவர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மத்திய மந்திரிகள் கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அதே போல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.
ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா (வயது 90) தனது வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் வெயிலில் ஓட்டு சேகரித்தார். இந்த நிலையில் கடைசி நாளான நேற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெங்களூருவில் நேற்று பி.எம்.டி.சி. பஸ்சில் பயணம் செய்து பயணிகளுடன் கலந்துரையாடி காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். அத்துடன் அவர் தனது பிரசாரத்தை முடித்து கொண்டார். பிரியங்கா காந்தி விஜயநகர், சிக்பேட்டை தொகுதிகளில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்டு காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். அத்துடன் பிரியங்கா காந்தி தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
பிரசாரம் ஓய்ந்தது
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான் போட்டியிடும் சிக்காவி தொகுதியில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு, அத்துடன் தனது பிரசாரத்தை முடித்து கொண்டார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தனது சொந்த தொகுதியான கனகபுராவில் நிறைவு செய்தார். நின்றுவிட்டது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பகிரங்க தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு
இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.