கர்நாடக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து கா்நாடக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து 7-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் பிறகு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்தார்.
அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் பதிலளித்தார். பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியதாக கூறி அதை கண்டித்து பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் சபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள், தங்களிடம் இருந்து காகிதங்களை கிழித்து துணை சபநாாயகர் ருத்ரப்பா லமானி மீது வீசி எறிந்தனர். இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டார். இதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த 2 நாட்களாக சபை கூட்டத்தை முழுவதுமாக புறக்கணித்து விதானசவுதா வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா, பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடைசி நாளான நேற்று சட்டசபை கூட்டத்தில் வருவாய்த்துறை குறித்த விவாதத்திற்கு அத்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பதிலளித்தார். அதைத்தொடர்ந்து சில உறுப்பினர்கள் பேசினர். அதன் பிறகு சபாநாயகர் யு.டி.காதர், சபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதன் மூலம் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அதே போல் மேல்-சபையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.