பயங்கரவாதி ஷாரிக்கிற்கு கர்நாடக ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு
மங்களூரு பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஷாரிக்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு கர்நாடக ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பை ஏற்பாடு செய்ய என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.
பெங்களூரு:
திடுக்கிடும் தகவல்கள்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த மாதம்(நவம்பர்) 19-ந் தேதி ஓடும் ஆட்டோவில் வெடிவிபத்து சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் மற்றும் ஆட்டோவில் பயணித்து வந்த பயணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். முதலில் சிகிச்சைக்காக மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், பின்னர் பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
குக்கர் வெடிகுண்டு
அதாவது ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பதும், அதை ஆட்டோவில் கொண்டு வந்தது பயங்கரவாதியான ஷாரிக் என்பதும் தெரியவந்தது. இதனால் உஷாரான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் விசாரணையில் குதித்தனர். இதையடுத்து ஷாரிக் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
முகமது ஷாரிக் என்கிற ஷாரிக், கர்நாடகம் உள்பட தென் இந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவ திட்டமிட்டு இருந்ததாகவும், அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், தானே வெடிகுண்டு தயாரித்ததாகவும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாகவும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
இதையடுத்து போலீசார் ஷாரிக்கை கைது செய்தனர். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கை கர்நாடக போலீசார் முறைப்படி என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்தனர். அதையடுத்து 3 குழுக்கள் அமைத்து ஷாரிக் குறித்தும், அவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட இருந்தது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் மங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் ஷாரிக் குறித்து விசாரணை நடத்தினர். குறிப்பாக ஷாரிக் மற்றும் அவரது குடும்பத்தார் வசித்து வரும் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஷாரிக்கின் வீடு, அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தி, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கிடையே நேற்று திடீரென ஷாரிக்கிற்கு சட்டம்-ஒழுங்கு போலீஸ் பாதுகாப்பை விலக்கிவிட்டு, கர்நாடக மாநில ஆயுதப்படை போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேரடியாக விசாரணையை தொடங்க...
தற்போது மங்களூருவில் முகாமிட்டுள்ள 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு, இதுவரையில் நேரடியாக ஷாரிக்கிடம் விசாரணையை தொடங்கவில்லை என்றும், தாங்கள் சேகரிக்க வேண்டிய தடயங்கள், ஆதாரங்கள் மற்றும் இதர தகவல்களை சேகரித்த பின்னரே நேரடியாக விசாரணையை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீதமுள்ள தலா 6 பேரை கொண்ட 2 என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினரில் ஒரு குழு கர்நாடக கடலோர மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், மற்றொரு குழு கேரளா மற்றும் தமிழகத்தில் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கர்நாடக போலீசாரிடம் இருந்து அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களையும் பெற்ற பின்னர் முதலில் இருந்தே இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாதக்கணக்கில் ஆகும்
ஷாரிக் பலத்த தீக்காயம் அடைந்திருப்பதால் அவர் சிகிச்சையில் இருந்து குணமாகி மீண்டு வர மாதக்கணக்கில் ஆகும் என்றும், அதனால் விசாரணை தாமதமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதன்காரணமாக ஷாரிக்கை பெங்களூரு அல்லது புதுடெல்லிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து விசாரணையை மேற்கொள்ள என்.ஐ.ஏ. திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள்
வெளியாகி உள்ளன.