புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'கந்ததகுடி' ஆவணப்படம் இன்று வெளியாகிறது


புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த கந்ததகுடி ஆவணப்படம் இன்று வெளியாகிறது
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘கந்ததகுடி’ ஆவணப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் கோலாகல ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

பெங்களூரு:

'கந்ததகுடி' வெளியாகிறது

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. புனித் ராஜ்குமார் உயிரிழப்பதற்கு முன்பு 'ஜேம்ஸ்' என்ற திரைப்படத்திலும், தனது கனவு படமான 'கந்ததகுடி' என்ற ஆவணப்படத்திலும் நடித்து இருந்தார்.

'ஜேம்ஸ்' திரைப்படம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் 'கந்ததகுடி' ஆவணப்படம் அக்டோபர் 28-ந் தேதி (அதாவது இன்று) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று

(வெள்ளிக்கிழமை) 'கந்ததகுடி' ஆவணப்படம் கர்நாடகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாக உள்ளது. காலை 7 மணிக்கு படத்தின் முதல் காட்சி வெளியிடப்படுகிறது.

24 மணி நேர இசை அஞ்சலி

'கந்ததகுடி' ஆவணப்படம் வெளியாவதையொட்டி புனித் ராஜ்குமார் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நேரில் பார்க்க முடியாத தங்களது இதய நாயகனை மீண்டும் ஒருமுறை தியேட்டரில் பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்து உள்ளனர். 'கந்ததகுடி' படம் வெளியாவதையொட்டி தியேட்டர்கள் முன்பு புனித்ராஜ்குமாரின் ரசிகர்கள் அவரது கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் தியேட்டர்கள் முன்பு தோரணங்கள் கட்டி கோலாகமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். அவரது பேனருக்கு பாலாபிஷேகம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி தியேட்டர்கள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் புனித் ராஜ்குமாரின் நினைவிடம் அமைந்து உள்ள கன்டீரவா ஸ்டூடியோ முன்பும் 75 கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

நாளை (சனிக்கிழமை) புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இதனால் கன்டீரவா ஸ்டூடியோவுக்கு அதிக ரசிகர்கள் வருவார்கள் என்பதால் அங்கு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 28-ந் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் 29-ந் தேதி (நாளை) நள்ளிரவு 12 மணி வரை 24 மணி நேரம் கன்டீரவா ஸ்டூடியோவில் இசை அஞ்சலி செலுத்தப்படும் என்று நடிகர் சாது கோகிலா கூறியுள்ளார்.


Next Story